கைது

பணம் கொடுக்க மறுத்ததால் ஒடிசா வாலிபரை கழுத்தை நெறித்து கொலை செய்த 3 பேர் கைது கோபி சிறையில் அடைப்பு;

Update: 2025-03-08 03:46 GMT
ஈரோடு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே ஊழியர்கள் பழைய குடியிருப்பு பகுதியில் கடந்த 4-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபர் ஒடிசா மாநிலம் பலிகாம்மை சேர்ந்த டன்டபனி ஹபல் (30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பிரேத பரிசோதனை முடிவில் தண்டபாணி கழுத்து நெறிக்கப்பட்டும், கைகளால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக ஈரோட்டில் ஓட்டல் சப்ளையராக வேலை பார்க்கும் அசாம் மாநிலம் டேஸ்பூரை சேர்ந்த பங்கஜ்‌ போரா (22) என்பவரை கடந்த 5-ம் தேதி போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பங்கஜ் அளித்த தகவலின்பேரில் கொலையான டன்டபனியுடன் நெருங்கி பழகிய சிலரை பிடிக்க சென்றனர். இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் இருந்த பங்கஜ், அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிய பங்கஜை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், பங்கஜ் சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்க சாவடி அருகே பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில், ஈரோடு டவுன் டி.எஸ்.பி.முத்துகுமரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பங்கஜை மீண்டும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் டன்டபனியுடன் பழகி வந்த சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ராஜூ (32), ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் என்ற திரிவேணி குமார் (32) ஆகிய 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், பங்கஜ், ராஜூ, ராகுல், மற்றொரு வாலிபர் என 4 பேர் சேர்ந்து டன்டபனியுடன் சேர்ந்து சம்பவ இடத்தில் மது அருந்தியும், கஞ்சா போதையிலும் இருந்தனர். டன்டபனி ரொக்கமாகவும், வங்கி கணக்கிலும் பணம் வைத்திருந்தார். அந்த பணத்தை மூவரும் கேட்டுள்ளனர். அதற்கு கையில் இருந்த பணத்தை மட்டும் கொடுத்து விட்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஜி.பே மூலமாக தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், டன்டபனியை தாக்கியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன்பேரில், பங்கஜ், ராகுல், ராஜூ ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Similar News