விபத்து

பவானிசாகர் அருகே இரவில் பரபரப்பு கார் கவிழ்ந்த விபத்தில் கர்நாடகா வியாபாரி பலி 9 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி;

Update: 2025-03-11 07:30 GMT
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா, பி.ஜி.பாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் (56), மாதேஷா (38), நாகராஜ் (40), ராஜா (50), பிரபு (47), மகேஷ் (40), களி (45), மகேஷ் (30), மாதேசா (40) ஆகியோர் ஒரே காரில் மேட்டுப்பாளையத்திற்கு பூண்டு வியாபாரம் செய்வதற்காக கிளம்பினர். காரை புனித்குமார் (27) என்பவர் ஓட்டினார். இவர்கள் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் பூண்டு வியாபாரம் முடித்துவிட்டு மீண்டும் கர்நாடக மாநிலம் செல்வதற்காக காரில் கிளம்பினர். நேற்று இரவு கார் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ரோடு, கோடா பாளையம் பிரிவு வெற்றிவேல் முருகன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது நடு ரோட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் மது போதையில் படுத்து கிடந்தார். இதை கவனித்த கார் டிரைவர் புனித் குமார் அந்த நபர் மீது மோதாமல் இருக்க காரை திடீரென பிரேக் போட்டார். திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத்தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மைக்கேல் என்ற வியாபாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 9 பேருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மைக்கேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News