நீலகிரி; அன்னமலை முருகன் கோவில் காவடி திருவிழா !
மஞ்சுர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் 35ம் ஆண்டு காவடி திருவிழா நாளை நடைபெறுகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-04-13 10:18 GMT
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது.‘நீலகிரி மாவட்டத்தின் பழனி’ எனவும் ‘முருகனின் 8வது படைவீடு’ எனவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் கிருத்திகை மற்றும் காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். தமிழ் புத்தாண்டு நாளான சித்திரை 1ம் தேதி நடைபெறும் காவடி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளை ஏந்தி ஊர்வலம் செல்வார்கள். இந்த ஆண்டு அன்னமலை முருகன் கோயிலின் 47ம் ஆண்டு நிறைவு விழா, பஞ்சலோக உற்சவமூர்த்தி பவனி விழா, உலக நல யாகப்பெரு விழா, திருத்தேர் விழா மற்றும் 35ம் ஆண்டு காவடி பெருவிழா நாளை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு வாஸ்து வழிபாடு, மகா கணபதி வேள்வி, நவகிரக வேள்வியுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான காவடி திருவிழா நாளை காலை அன்னமலை அடிவார விநாயகர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து மகாயாகம், 108 திரவிய யாகம், கோ பூஜை, உலக நல பிரார்த்தனை நடக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாது சன்னியாசிகளின் கலந்து கொண்டு ஆன்மீகம் குறித்து பேசுகின்றனர். இதன்பின்னர் அன்னதானம் மற்றும் படுகர், மலைவாழ் பழங்குடிகளின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.