நீலகிரி : மனு பெட்டியில் பெறப்பட்ட மனுக்கள்

நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டி மூலம் மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-03-19 06:25 GMT

பெட்டியில் மனுக்களை போடும் மக்கள் 

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கடைபிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இது தவிர, மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்கடுத்தத் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், " தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை, பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட முகாம்கள் நடைபெறாது.

அதேபோல் தேர்தல் முடிந்த பின்னர் வழக்கம்போல் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடைபெறும். ஆனாலும் குறை தீர்ப்பு கூட்டம் இருக்கும் என்று நினைத்து பொதுமக்கள் ஒரு சிலர் ஆட்சியர் அலுவலகம் வருவதால், அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் போட பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் முடிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், " என்றனர்

Tags:    

Similar News