4 வருடமாக வார்டில் பணி எதுவும் நடைபெறவில்லை - கவுன்சிலர் குற்றசாட்டு

Update: 2023-11-21 01:16 GMT

ஒன்றியக்குழு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள ரகுநாதசமுத்திரம், கோட்டுப்பாக்கம் ஆகிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாமல் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குற்றம் சாட்டி அப்பகுதி கவுன்சிலர் யூனியன் கவுன்சில் கூட்டத்தில் காரசாரமாக கேள்விகள் எழுப்பினார். இதற்கு எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் வளர்ச்சிப் பணிகள் பிரித்து வழங்கப்பட்டு வருவதாக யூனியன் சேர்மன் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நேரம் யூனியன் கவுன்சில் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நேற்று காலை கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் இந்திரா தலைமை வகித்தார்.பிடிஓ வெங்கடேசன் முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் லட்சுமி வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் ஏதாவது பேச வேண்டும் என்றால் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என யூனியன் சேர்மன் இந்திரா கேட்டுக்கொண்டார். அப்பொழுது எழுந்து பேசிய ரகுநாதசமுத்திரம் கவுன்சிலர் ராஜா பேசியபோது கடந்த 4 வருடங்களாக தவணி, ரெட்டிகுப்பம், ரகுநாதசமுத்திரம், மகாதேவிமங்கலம் ஆகிய பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்யவில்லை. குறிப்பாக மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. ஊருக்குள் போக முடியவில்லை பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியனில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஒரே மாதிரி பாருங்கள். இந்த முறையாவது ரூ. 60 லட்சம் வளர்ச்சி பணி திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் வேலையாவது கொடுத்திருக்கலாம். இதனால் என்னுடைய பகுதி கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கவுன்சில் கூட்டத்தில் கேள்வி கேட்க கூட உரிமை இல்லையா? கேள்வி கேட்டால் தவறா? கவுன்சிலர்கள் அனைவரையும் கேட்கிறேன் நான் பேசுவது தவறா? தவறாக இருந்தால் என் பதவியை ராஜினாமா செய்து விட்டு போகிறேன். கட்சி பாகுபாடு வேண்டாம். எல்லோரையும் ஒரே மாதிரி பாருங்கள் என ஆவேசமாக பேசினார். இதேபோல் கோட்டுப்பாக்கம் கவுன்சிலர் குமரேசனும் பேசும்போது கோட்டுப்பாக்கம், மேலச்சேரி, நல்லடிசேனை, மஞ்சனூர், கோழிப்புலியூர் போன்ற கிராம மக்களுக்கு கடந்த 4 வருடங்களாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் ஒதுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நியாயமா? இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கு. ஆகவே மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு யூனியன் சேர்மன் இந்திரா பதிலளித்து பேசியபோது உங்களுக்கு கொடுத்த வேலைகளை உடனே செய்து முடியுங்கள். வேலை முடிக்காமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். உட்காருங்கள். பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 57 கிராமங்களிலும் கட்சி பாகுபாடு இல்லாமல் வளர்ச்சி பணி திட்டங்கள் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. எல்லோரையும் எல்லா மக்களையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன். இதில் பாகுபாடு எதுவும் கிடையாது. இயற்கை சீற்றம் ஏற்படும் பேரிடர் நேரத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தேவை. மக்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு மருந்து அடித்து கொசு உற்பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிராம மக்களுக்கு நல்ல முறையில் செல்கிறது என அவர் காரசாரமாக பதில் அளித்து பேசினார். இதனால் பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News