விநியோகிக்கப்படாத குடிநீர் - மடிப்பிச்சை ஏந்தி சாலை மறியல்

கம்பைநல்லூர் அடுத்த சமத்துவபுரத்தில் குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-21 03:49 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் அடுத்த சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் மக்களுக்கு இரண்டு வாரத்துக்கு மேலாக பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை என்பதால் பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்லும் பணியாளர்கள் உட்பட அனைவரும் தண்ணீருக்காக தத்தளிக்கின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பெண் ஒருவர் தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மடிப்பிச்சை ஏந்தினார். இதனைத் தொடர்ந்து ஒரு மூதாட்டி துணி துவைக்க கூட தண்ணீர் இல்லை சார் என இரண்டு பையில் துணிகளை எடுத்து வந்து காவல்துறையினர் முன்பு சாலையில் வைத்தார். பின்பு ஆழ்துளை கிணறு பழுது ஏற்பட்டதால் குடிநீர் வழங்குவதற்கு தாமதமாகி உள்ளன எனவே உடனடியாக இதனை சரி செய்து பழுதுகளை நீக்கி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதாக அதிகாரிகள் கொடுத்த உத்திரவாதத்தின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News