நாவல் பழம் விலை உயர்வு
குமரியில் நாவல் பழங்கள் விலை அதிகரித்த நிலையில் கிலோ ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நாவல் மரங்கள் உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களிலும் நாவல் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. தற்போது நாவல் பழ சீசன் என்பதால் இந்த மரங்களில் நாவல் பழங்கள் காய்த்து குலுங்குகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது அவை உதிர்ந்து தரையில் விழுகிறது. ஆனால் அவற்றை யாரும் கண்டு கொள்வதில்லை.
தரையில் விழுந்தால் பழங்களை சேகரித்து சாப்பிடவும் தற்போது யாரும் முன்வருவதில்லை. அதனால் நாவல் மரங்களில் உள்ள பழங்கள் பழுத்து மண்ணோடு மண்ணாக மாறி வீணாகி விடுகின்றன. இந்த பழத்தில் புரோட்டின் கால்சியம் போன்ற சத்துக்களுடன் மருத்துவ குணம் கொண்டதாகும். ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்து தயார் செய்ய நாவல் பழங்களை பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து நாவல் பழங்கள் குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இவை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை கிலோ 340 முதல் 400 ரூபாய் வரை ஒரு கிலோவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் மக்கள் அதிக விலை கொடுத்து இந்த பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.