ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கை

விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் ஒன்றாவது வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்ற உத்தரவின் படி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Update: 2024-01-18 13:44 GMT
ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் ஒன்றாவது வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்ற உத்தரவின் படி மறுவாக்கு எண்ணிக்கை 

கடந்த 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓ.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றாவது வார்டில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் சங்கரபாண்டியன், முத்துப்பாண்டியன் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் இந்த வார்டு பகுதியில் 188 வாக்குகள் பதிவான நிலையில் 2 செல்லாத ஓட்டுக்கள் தவிர்த்து முத்துப்பாண்டியன் 126 ஓட்டுக்களும், சங்கரபாண்டியன் 60 ஓட்டுக்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து சங்கரபாண்டியன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஜே.எம்.2., நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து இன்று விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஓ.கோவில்பட்டி ஒன்றாவது வார்டில் மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மனுதாரர் சங்கரபாண்டியனும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முத்துப்பாண்டியனும் நேரில் ஆஜராகினர்.

அதே போல் அரசு வழக்கறிஞர் அதிபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், மனுதாரர் வழக்கறிஞர் மாரிமுத்து முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கான முடிவுகளை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சமர்பித்துள்ளார். விரைவில் மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளார்.

Tags:    

Similar News