அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் மாணவிகள் 2 பேர் மாயம் 

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கல்லூரியில் படித்து வந்த செவிலியர் பயிற்சி மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-04-03 01:08 GMT

மாயம்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சி கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த மாணவி மூன்றாம் ஆண்டும், மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறார்கள். 2 பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஒரே அறையில் தங்கி இருந்ததுடன் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செவிலியர் விடுதியில் இருந்து ஒன்றாக சேர்ந்து வகுப்புக்கு சென்றவர்கள் மதியம் 1 மணிக்கு விடுதியில் உணவருந்த வரவில்லை. இதையடுத்து உடனடியாக விடுதி கண்காணிப்பாளர் லதா, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயசிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு மாணவிகள் குறித்து விசாரித்தனர்.

அப்போது தான் சிவந்திப்பட்டியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு யாரிடமும் சொல்லாமல் மாணவிகள் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து வருமாறு குடும்பத்தினரிடம் போலீசார் கூறினர். ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், மாணவிகள் நேரில் வந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர்.

Tags:    

Similar News