அலுவலர்கள் உறுதி மொழி - கைவிடப்பட்ட சாலை மறியல்

பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகளுடன் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Update: 2024-01-28 03:54 GMT
வட்டாட்சியர் அலுவலகம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 16 வார்டு கூப்புளிக்காடு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மயானக் கரையிலிருந்து குளக்கரை செல்லும் பாதை அமைத்து தராததைக் கண்டித்தும் ஜனவரி 31 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தெய்வானை தலைமையில், சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், வட்ட வழங்கல் அலுவலக வருவாய் ஆய்வாளர், பேராவூரணி சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசுத் தரப்பிலும், பேரூராட்சி கவுன்சிலர் மு.த.முகிலன், அன்பழகன், முத்துசாமி, உதயகுமார், சின்னக்கண்ணு, வீரலட்சுமி உள்ளிட்டோர் கிராமத்தரப்பிலும் கலந்து கொண்டனர்.  இதில், கூப்புளிக்காடு கிராமத்தில் பொதுமக்களில் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடி அமைத்திட தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற்று தரப்படும். மெயின் ரோட்டில் இருந்து காமாண்டி கோயில் செல்லும் சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

  மயான கரையிலிருந்து குளக்கரை வழியாக, பொதுப்பணித்துறை வாய்க்கால் ஓரத்தில், பாதை அமைத்திட தொடர்புடைய கிராம பொதுமக்கள் சார்பில், பொதுப்பணித்துறையிடம் மனு அளிக்கும் பட்சத்தில், அதன் பேரில் பொதுப்பணித் துறையினரிடம் இருந்து உரிய கடிதம் பெற்று, பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் நில அளவை மேற்கொண்டு பாதை அமைத்திடப்படும் என முடிவு செய்யப்பட்டது.  இதையேற்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News