பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
படப்பை அடுத்த கரசங்கால் விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், சேலையூர், குரோம்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் 70 பள்ளிகளில், 506 பள்ளி வாகனங்கள் ஏற்கனவே உரிமம் பெற்றுள்ளன. இந்த வாகனங்களின் தரம், பாதுகாப்பு சம்பந்தமான சோதனை, படப்பை அடுத்த கரசங்கால் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.
கோடை விடுமுறை முடிந்து, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், இந்த சோதனை நடந்தது. இதில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ்பாபு, வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளி வாகனங்களின் பிரேக், ஹாரன், முகப்பு விளக்கு, இண்டிகேட்டர், வேக கட்டுப்பாடு கருவி, அவசரகால வழி, இருக்கைகள், படிக்கட்டுகள், வாகன உரிமம் ஆகியவற்றை சோதனை செய்தனர்.
நேற்று நடந்த முதற்கட்ட ஆய்வில், பங்கேற்ற 350 வாகனங்களில் 344ல், மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்காக வசதிகள் இருந்ததால், அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவசரகால கதவு திறக்காதது, தீயணைப்பு கருவி இல்லாதது உள்ளிட்ட குறைபாடு காரணமாக ஆறு வாகனங்கள் நிராகரிக்கப்படன. இரண்டாம் கட்ட ஆய்வு வரும் 24-ம் தேதி நடக்கிறது. பள்ளி வாகனங்களின் ஆய்வுக்காக நேற்று காலை 7:00 மணிக்கு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.ஆவணங்கள் சரிபார்த்த பின் ஆய்வு நடத்தப்பட்டது.