ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை: பெண் காவல் ஆய்வாளர் கைது

ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-28 16:34 GMT

கைது செய்யப்பட்டவர்

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்தவர் ராமர் (60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி(65) குடும்பத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி முத்துமாரியம்மன் கோயிலில் சிங்கம் சிலை வைக்க வேண்டும் என ராமசாமி மகன் ராம்குமார் கூறியுள்ளார். அதற்கு ராமர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராமசாமி குடும்பத்திற்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ராமசாமி அவரது மகன்கள் ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கல் மற்றும் இரும்பு கரண்டியால் தாக்கினர்.

இதில் காயமடைந்த ராமர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராமரின் மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் ராமசாமி, ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய நகர் போலீஸார் ராமசாமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய ராம்குமார் மற்றும் மேலும் ஒரு பெண்ணை தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் ராம்குமார் உடன் கைதான பெண், சத்யசீலா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News