சேதுபாவாசத்திரம் அருகே கார் கவிழ்ந்து மூதாட்டி பலி
சேதுபாவாசத்திரம் அருகே கார் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியானார்.
மதுரையை சேர்ந்த அந்தோணிராஜன்(50) தமது மனைவி சகாயராணி(45) மகன் ஜெரோம்(15) மாமியார் சூசைமேரி ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று விட்டு செவ்வாய்க்கிழமை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். காரை அந்தோணிராஜன் ஓட்டி வந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பிள்ளையார் திடல் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென தனது மொபட் வாகனத்தை, இடப்பக்கம் திருப்பியுள்ளார். கார் அவர்மீது மோதாமல் இருப்பதற்காக, திருப்பிய போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஒரு பக்கம் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.