பைக் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பன்னீர்செல்வம் (68). இவர் இன்று காலை தனது மோட்டார் பைக்கில் சூசை பாண்டியபுரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி திருநெல்வேலி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் இவரது மோட்டார் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பன்னீர் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.