சுக்குப்பாறை - தேரி விளை ரயில்வே கேட் திறப்பு
பொதுமக்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 5 மாதங்களுக்குப் பின் சுக்குப் பாறை - தேரி விளை ரயில்வே கேட் திறக்கப்பட்டது.
குமரி மாவட்டம் நாகா்கோவில் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதைப் பணிக்காக, சுக்குப் பாறை - தேரி விளை ரயில்வே கேட் 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு, பணிகள் நடைபெற்றன. இதனால், இப்பாதையைப் பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவதியடைந்தனா். இதனிடையே, இரட்டைப் பாதைப் பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து தொடங்கிய பிறகும், இந்த ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் இப்பாதையைப் பாா்வையிட நேற்று வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சுக்குப்பாறை தேரிவிளை ஊா்த் தலைவா் சிவக்குமாா் தலைமையில் பொதுமக்கள் கூடினா். ரயில்வே கேட்டை உடனடியாக திறக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் எனவும், தோ்தலைப் புறக்கணிப்போம் எனவும் தெரிவித்தனா். இதையடுத்து பொது மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ரயில்வே கேட்டை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரயில்வே கேட் திறக்கப்பட்டு, இருசக்கர வாகனப் போக்குவரத்து தொடங்கியது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.