தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள்:எம்எல்ஏ
எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்துபவர்கள் பிஜேபிகாரர்கள் என்றும் தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலினை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திமுக-அதிமுக கள்ளக் கூட்டணி என டிடிவி தினகரன் கூறியது குறித்த கேள்விக்கு: அது அவர்கள் குடும்ப வழக்கம். கள்ளத்தொடர்பு என்கிற வார்த்தை சரியான வார்த்தை அல்ல. அதிமுக தனித்து நிற்கிற கட்சி. எப்போது எதிர்க்க வேண்டுமோ அப்போது எதிர்ப்போம்.
எப்போது ஆதரிக்க வேண்டுமோ அப்போது ஆதரிப்போம். இனி டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்களுக்கு தமிழகத்தில் வேலை இல்லை. அவர்களெல்லாம் தேசிய கட்சியோடு ஒன்றிணைந்து விட்டார்கள். ஆனால் அதிமுக திராவிட கட்சிகளிலே முன்னணி கட்சி. தேர்தலுக்குப் பிறகு வரும் புள்ளி விவரத்தை பாருங்கள் அதிமுக தான் அதிக வாக்குகளை பெற்ற கட்சியாக இருக்கும்.
மதுரையில் போதையில் இளைஞர்கள் தகராறு ஈடுபட்டதில் காவல்துறை நிலைப்பாடு குறித்த கேள்விக்கு: எந்த போதையாக இருந்தாலும் தற்போது மதுபான கடைகள் பல பரிமாணங்களில் அதிகரித்துவிட்டது. இளைஞர்கள் அதிக போதை ஒத்துக்கலை பயன்படுத்துவதாக எடப்பாடியார் சொன்னார். ஆனால் தமிழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
இளைஞர்கள் கெடுவதற்கு காரணம் அரசின் கட்டுப்பாடு அற்ற போதை வியாபாரம் தான். ஓபிஎஸ் வெற்றிக்கு பிறகு தென் தமிழக அதிமுக அவரிடம் செல்லும் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு: ஓபிஎஸ் எட்டாத கனிக்கு ஆசைப்படுகிறார். ஓபிஎஸ் டெபாசிட்டை காப்பாற்றினாலே பெரிய விஷயம். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ம், தேனியில் டிடிவியும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்துபவர்கள் பிஜேபிகாரர்கள் அவர்களுடன் சேர்ந்தார்கள். அவர்களின் வரலாறு இனி தாமரை தொட்டியுடன் தான். தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள். மத்திய அரசு பதவியோ அல்லது பொறுப்போ தருவார்களா என்று எதிர்பார்த்து போகலாமே தவிர தமிழகத்தில் அவர்களுக்கு இனி வேலை இல்லை என்றார்.