அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையத்தில் உள்ள அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையத்தில் உள்ள அம்மன் ஆலயத்தில் நடந்த பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர். கும்பகோணம் அருகே தாராசுரம் பேரூராட்சி, எலுமிச்சங்காபாளையம் மேலத்தெருவில் எழுந்தருளியுள்ள அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் 18ம் ஆண்டு விழா கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தாராசுரம் அரசலாற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரை, காவடி, அலகுகாவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கஞ்சி வார்த்தலும், இரவு சந்தன காப்பு அலங்காரத்துடன் இவ்வாண்டிற்கான பங்குனி திருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.