மண்டபம் அருகே பங்குனி உத்திர திருவிழா:1001லிட்டர் பாலபிஷேகம்

மண்டபம் அருகே ஶ்ரீ சக்தி வடிவேல் முருகன் ஆலயத்தில் 53-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் 1001 லிட்டர் பாலபிஷேகம் செய்யப்பட்டது.

Update: 2024-03-26 10:01 GMT

முருகனுக்கு பாலபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட இடையர் வலசையில் ஏழு கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீசக்தி வடிவேல் முருகன் கோவில் கடந்த 16-ம் தேதி காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. 435 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

கடந்த 22-ம் தேதி தென் கடற்கரை சென்று கோவில் சார்பில் பொது காவடி கட்டப்பட்டது. காவடி முருகன் சக்தி, இடும்பன் சக்திவேல், தேர் முருகன் ஆனந்த் ஆகியோர் பொது நேர்த்தி கடன் செலுத்தினர். பங்குனி உத்திர நாளன்று கூட்டச்சாலை நாகநாதர் ஆலயத்திலிருந்து பால்குடம், தேர் காவடி, வேல்காவடி, எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். ஶ்ரீசக்தி வடிவேல்முருகனுக்கு 1001 லிட்டரில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மதியம் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணியளவில் பூக்குழி வளக்கப்பட்டு, அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெண்கள் பூக்குளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பங்குனி உத்திர விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா ஆதிமூலம், கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் K. ராமமூர்த்தி, செயலாளர் அர்சுணன், பொருளாளர் நாகசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மண்டபம் காவல் துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News