மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டி - ஆட்சியர் துவக்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாற்று திறன் சிறப்பு பள்ளி மாணவ மாணவியரின் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.
போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசுகையில் - உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் ஒருவராக நிலைப்படுத்திடும் வகையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நடக்கும் இப்போட்டிகளில் 18 சிறப்புப்பள்ளிகளிலிருந்து மனவளர்ச்சிகுன்றியவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காதுகேளாதோர்கள் என சுமார் 175 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் .இப்போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மரு.சு.சிவசங்கரன், சிறப்புப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொண்டுநிறுவன நிர்வாகிகள், மாவட்ட விளையாட்டு அலுவலக பணியாளர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.