ஆட்டியாம்பட்டி பிரிவுச்சாலையில் பேருந்து நிற்காததால் பயணிகள் தவிப்பு
நாமக்கல் - சேலம் செல்லும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆட்டியாம்பட்டி பிரிவுச் சாலையில் நிற்காததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட்டில் மட்டுமே நின்று செல்கிறது. ராசிபுரம் அடுத்த ஆட்டியாம்பட்டி பிரிவு சாலையில் நிற்பது இல்லை.
இதனால், நாமக்கல்லில் இருந்து ஆட்டியாம்பட்டி பிரிவு சாலைக்கு செல்லும் பயணிகள் ஆண்டகளூர்கேட் வந்து, பின்னர் ராசிபுரம் சென்று, அங்கிருந்து ஆட்டியாம்பட்டி பிரிவு சாலைக்கு செல்லும் நிலை உள்ளது. நாமக்கல்லில் இருந்து செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் ஆட்டியாம்பட்டி பிரிவு சாலையில் நின்று செல்லும் என நாமக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து துறையினர் பேனர் வைத்துள்ளனர்.
ஆனால், ஆட்டியாம்பட்டி பிரிவுச் சாலையில் அரசு, தனியார் பேருந்துகள் நிற்பது அரிதாகவே உள்ளது. இந்த நிலையில், நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டியாம்பட்டி பிரிவு சாலைக்கு செல்ல காத்திருந்த பயணி ஒருவர் 15 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்தினருடன் கேட்டும் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.