ஸ்ரீபெரும்புதூரில் நோயாளிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி இல்லாததால், நோயாளிகள் அவதியடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி இல்லாததால், நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ஸ்ரீபெரும்புதுாரில் 7 ஏக்கர் பரப்பில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு, பொது மருத்துவம், பெண்கள் சிறப்பு மருத்துவம், மகப்பேறு, காது, மூக்கு, தொண்டை, கண், பல், எலும்பு முறிவு சிகிச்சை, சித்தா உட்பட பல பிரிவுகள் உள்ளன. தவிர, எக்ஸ் ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது.
இதனால் இங்கு, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மருத்துமனையில் போதிய இருக்கைகள் இல்லாததால், நோயாளிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழல் உள்ளது. பெண்கள், முதியோர் நிற்க முடியாமல், மருத்துவமனையில் வெளியில் உள்ள சுவர் மீது அமர்ந்து உள்ளனர்.
மேலும், மருத்துவர்கள் தாமதமாக வருவதாக, நோயாளிகள் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியசூழல் உள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. எனவே, பல்வேறு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் எண்ணிக்கைகு ஏற்றார் போல், மருத்துவர்களை நியமித்து, போதிய இருக்கை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.