தஞ்சாவூரில் 15 கோயில்களின் முத்துப் பல்லக்கு திருவிழா
தஞ்சாவூர் மாநகரிலுள்ள 15 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகரிலுள்ள 15 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள விநாயகர், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்த நாயனார் குருபூஜையையொட்டி முத்துப் பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, கீழவாசல் வெள்ளை விநாயகர் கோயில், குறிச்சி தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆட்டு மந்தைத் தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், மகர்நோன்புசாவடி சின்ன அரிசிக் காரத் தெரு பழனியாண்டவர் கோயில், கீழவாசல் உஜ்ஜையினி காளி கோயில் தெரு ஸ்ரீ கல்யாண கணபதி கோயில், செüராஷ்டிரா தெரு ஜோதி விநாயகர் கோயில், தெற்கு வீதி கமலரத்ன விநாயகர் கோயில், மேல வாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், மேல ராஜ வீதி ஸ்ரீதிருஞானசம்மந்தர் கோயில், வடக்கு வாசல் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில், சிரேஸ்சத்திர சாலை ஸ்ரீவடபத்ரகாளி அம்மன் கோயில், காமராஜர் சந்தை செல்வ விநாயகர் கோயில், கொடிமரத்து மூலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில், ரெட்டிபாளையம் சாலை ஸ்ரீ வெற்றி முருகன் கோயில், ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயில் ஆகியவற்றிலிருந்து சனிக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் விநாயகர், முருகப் பெருமான் எழுந்தருளினர். இந்த முத்துப் பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு, ஒன்றாக இணைந்து தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை வலம் வந்தன. இதைக் காண ஏராமான பக்தர்கள் திரண்டனர்.