சாலை சந்திப்பில் மின்விளக்கு அமையுமா?
திருத்தணி அருகே ஞானக்கொல்லி தோப்பு மூன்று சாலை சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-03-10 07:32 GMT
ஆர்.கே.பேட்டையில் இருந்து ஞானக்கொல்லி தோப்பு வழியாக சோளிங்கருக்கு தார் சாலை வசதி உள்ளது. சோளிங்கரிலிருந்து ஞானக்கொல்லிதோப்பு செல்லும் கூட்டு சாலையில் இருந்து வெங்குப்பட்டு சாலை பிரிகிறது. ஆர்.கே.பேட்டையில் இருந்து வெங்குபட்டு வழியாக அரக்கோணம் செல்ல இது குறுக்குப் பாதையாகவும் அமைகிறது. சோளிங்கர் வழியாக நகர நெரிசலில் சிக்கித் தவிப்பது தவிர்க்கப்படுகிறது மேலும் 10 கி. மீ., வரை பயண வழி குறைகிறது. இந்நிலையில் ஞானக்கொல்லி தோப்பு மூன்று சாலைகள் சந்திப்பில் அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்த சந்திப்பில் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகளும் விபத்து அபாயத்தில் தவித்து வருகின்றனர். பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி இந்த முச்சந்தியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.