க. பரமத்தியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
க. பரமத்தியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி உள்ளது. க. பரமத்தியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கல்குவாரிகளுக்காக அதிகப்படியான கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே, கரூர் - கோவைக்கு போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. இரு வழி சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் எப்போதும் உள்ளது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த குறைகளை கண்காணிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.
தற்போது சட்டம் ஒழுங்கு காவல்துறையினரை வைத்து போக்குவரத்து பிரச்சனைகளை சமாளித்து வருகின்றனர். எனவே, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களை கண்காணிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். எனவே, க.பரமத்தியை தலைமை இடமாகக் கொண்டு புதிய போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.