மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 8,362 பேர் கைது
Update: 2024-06-01 06:05 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 மாதங்களில் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டதில் சாராயம், மதுபானம் விற்றதாக 8,290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,362 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைதான இவர்களிடமிருந்து 12 கார்களும், 3 ஆட்டோக்களும், 46 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2,232 லிட்டர் கள்ளச்சாராயமும், 79,727 புதுச்சேரி மாநில மது பான பாட்டில்களும், 6,080 லிட்டர் கள்ளும், 511 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மதுவிலக்கு குற்றவாளிகள் மீது பதிவேடு ஆரம் பிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 250 கிராமங்கள் கள்ளச்சாராயம் இல்லாத கிராமங்கள் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் திண்டிவனத்தை அடுத்த எண்டியூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவி வந்த நிலையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த குப்பன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சாராயம் மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்களின் மீது குண்டர் தடுப்புச்சட்டம் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்ச ரிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.