காஞ்சிபுர மக்கள் மத்திய திட்டங்களால் பயன்பெற்றவர்கள்: அண்ணாமலை
ஸ்ரீபெரும்புதுாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி, ஸ்ரீபெரும்புதுாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் இந்த லோக்சாபா தேர்தலில் ஆட்சி அமைக்க போகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை அரசியல் காரணங்களுக்காக யாரும் எடுக்காத முடிவை பிரதமர் மோடி எடுக்க போகிறார். ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தவிர, யார் வென்றாலும் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருப்பார்கள்.
இதனால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. ஆனால், நமது த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால் வெற்றி பெற்றால், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்த தொகுதிக்கு வந்தடையும். முத்ரா கடன் திட்டத்தின் கீழ், சிறு, குறு நிறுவனங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும், 45 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் மத்திய அரசு வழங்கி வருகிறது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 41,455 வீடு, 2,16,311 இலவச குடிநீர் இணைப்பு, 89,873 பேருக்கு இலவச கழிப்பறை உள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது.