சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2024-06-06 15:14 GMT
சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

மறைமலை நகர் நகராட்சி, 21 வார்டு நரசிங்கபுரம் காலனி பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு உள்ள சாலைகளில், நகராட்சி சார்பில், இரண்டு மாதங்களுக்கு முன் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக, சாலை வளைவுப்பகுதிகளில் மிகவும் குறுகலாகி, வாகனங்கள் சென்று திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: புதிய மழைநீர் வடிகால்வாய், முறையாக சாலையை அளவீடு செய்து அமைக்கப்படாததால், சாலை குறுகலாகி உள்ளது. மேலும், இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், பலரின் வீடுகளில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இவற்றை எடுக்க வர வேண்டிய தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், பாதை குறுகலாக உள்ளதால் வர மறுக்கின்றனர்.

இதன் காரணமாக, குடியிருப்புவாசிகள் கழிவு நீரை இந்த கால்வாயில் விடுகின்றனர். இதனால், பகுதி முழுதும் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. கழிவுநீர் தொட்டி நிரம்பி, கழிவு நீர் வெளியேறுவதால், இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் தண்ணீரில் கழிவு நீர் கலக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, இந்த பகுதியில் வாகனங்கள் சென்று வர மாற்று ஏற்பாடுகள் செய்யவும், இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News