பெரம்பலூர் : தபால் வாக்குகள் பெற 53 குழுக்கள் அமைப்பு

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு பெற பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-05 07:48 GMT

மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்- பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு வந்து நேரில் வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க ஏதுவாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கும் 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் முதல்கட்டமாக ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குபதிவு செய்ய உள்ளனர். இத்தேதிகளில் வாக்காளர்கள் இருப்பிடங்களுக்கு குழுக்கள் செல்லும் போது வாக்காளர்கள் இல்லையெனில் அந்த வாக்காளர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும், இரண்டாவது முறைவாய்ப்பில் வாக்கு செலுத்தாதவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது.

இக்குழுவினர் வருகை குறித்து அலைப்பேசி வாயிலாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தபால் மூலம் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தவறாது தங்கள் வாக்குகளை அளிக்கலாம். இது குறித்து விபரங்கள், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News