உப்பளத் தொழிலாளர்கள் பட்டா கேட்டு மனு
விளாத்திகுளம் அருகே உப்பளத் தொழிலாளர்கள் 90 பேர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 05:19 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் 90பேர் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என்று ஏற்கனவே விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது வரை அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பார்த்திபன் தலைமையில், உப்பளத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பங்களுடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது, தங்கள் ஏற்கனவே பலமுறை மனு அளித்திருந்தும், தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும் தற்போது வரை தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாதது ஏன்? என்று விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் கேட்டு நிலமும், வீடும் இல்லாததால் வாடகை வீட்டில் மழைக்காலங்களில் தாங்கள் படும் கஷ்டத்தை வட்டாச்சியரிடம் விளக்கிக்கூறி உடனடியாக தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உங்களது அனைவரின் மனுக்களின் மீதும் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் பனையூர் கிராம தலைவர் வேலுமுனியாண்டி, தெற்கு ஒன்றிய பாஜக சுயம்பு, கட்சி நிர்வாகிகள் கந்தசாமி, இருதயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.