டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் மனு
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
Update: 2024-06-27 13:01 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கான பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் இவ்வழியே சென்று வருகின்றன. இப்பகுதியில் முப்பிடாதியம்மன் கோயில் உளஅளது. பக்தா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு, தனியாா் ஊழியா்கள், பொதுமக்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வதால் இப்பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்ச் சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மது வாங்குவோா் அங்கேயே குடித்துவிட்டு பாட்டில்களை போட்டுச் செல்வதும், சாலைகளிலும், அருகேயுள்ள தெருக்களிலும் ஆடைகள் கலைந்த நிலையில் விழுந்துகிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், பெண்கள், மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கடந்த 27.9.23இல் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.டி. சங்கரசுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கடைகளை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினராம் ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி. சங்கரசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதியினா் கோட்டாட்சியா் கவிதாவிடம் மனு அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.