யானை கூட்டத்தை விரட்ட கோரி ஆட்சியரிடம் மனு

ஊட்டி அருகே அறையட்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை விரட்ட கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2024-02-29 05:16 GMT

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அறையட்டி கிராம சுற்று வட்டார பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளதால் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கும் புகும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதும் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. அந்த யானை கூட்டம் ஊட்டி அருகே உள்ள அறையட்டி கிராமத்திற்குள் கடந்த மாத இறுதியில் உணவு தேடி புகுந்தது.

இந்த யானைகள் கூட்டம் அங்குள்ள குடியிருப்புகளின் அருகே விவசாய நிலங்களில் இருந்த காய்கறிகளை சேதப்படுத்தின. குறிப்பாக மேரக்காய் பயிர்களை நாசம் செய்தன. யானையை தாக்கி லட்சுமணன் என்பவர் உயிரிழந்தார். மேலும் கோவில் சுற்றுச்சூரை சேதப்படுத்தின. கிராமத்தை ஒட்டி முகாமிட்டு இருந்ததால் பயந்து போன பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் 7 குழுக்கள் அமைத்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். தற்போது மீண்டும் யானைகள் அறையட்டி, கெரடாலீஸ் பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர். யானை தாக்கி ஏற்கனவே ஒருவர் இறந்திருப்பதால், மேலும் உயிரிழப்பு ஏற்படும் முன்னர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்

Tags:    

Similar News