ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-25 05:32 GMT

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பசுவை.பெரு. பாரதி தலைமையில் வந்த அந்த அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், தூய்மை பணி தொழிலாளர்களுக்கு 2024- 25 ஆம் ஆண்டிற்கு அறிவித்த தினக்கூலி ரூபாய் 710 ஊதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதி மாதம் ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்குள் மாத ஊதியம் சம்பா ரசீதுடன் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்வதற்கு முறையாக 6 மாதத்துக்கு ஒருமுறை ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடல் உழைப்பு தொழிலாளர்களான ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அளிக்க வேண்டும். இலவச மருத்துவ பரிசோதனை, ஆயுள் காப்பீடு மற்றும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்தல் போன்ற திட்டங்கள் முறையாக ஒப்பந்த தொழிலாளருக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், கரூர் மாநகராட்சியில் பணி புறக்கணிப்பு செய்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News