கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலவேணிகலையரசு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-06-28 10:25 GMT

மனு அளித்தவர்கள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலவேணி கலையரசு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர் .

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கடத்தூர் வருவாய் கிராமத்தில் விவசாய பூமிக்கு அருகில் அமராவதி ஆற்றுப்படுகை உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் மிடாபாடி ஊராட்சி நிர்வாகம் என்ற பெயரில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் சில தனி நபர்கள் தன்னிச்சையாக கிணறு வெட்டி மோல்டு அமைத்துள்ளனர். இதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடமோ ,  பொதுப்பணித்துறை , 

ஊராட்சி மன்ற பஞ்சாயத்திலோ  எந்த வித முறையான அரசு அனுமதியும் பெறவில்லை. மேலும் ஆற்றுக்குள்ளும் ஆற்றுப்படுகையிலும் கிணறு வெட்டி பைப்லைன் அமைத்து திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள தங்களது விவசாய பூமிகளுக்கும் ,  தொழிற்சாலைகளுக்கும் , மட்டை மில்களுக்கும் பூமிக்கு அடியில் மின் வயர்கள் பதித்தும் , மின் மோட்டார் மூலம் முறை கேடாக தண்ணீர் திருடி வருகின்றனர்.

அமராவதி ஆற்றில் இதுபோல் முறைகேடாக தண்ணீர் எடுப்பதால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் பாதிப்படைகிறது. கடத்தூர் விவசாய பெருமக்கள் தங்கள் விவசாயம் செய்த பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பூமிக்கு அடியில் மின் வயர்களை பதித்து குழாய்கள் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் வயர்களில் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டால் வாய்க்கால் தண்ணீர் , வயல்வெளி பகுதிகள் மற்றும் அமராவதி ஆற்று நீரில் மின்சாரம் பாய்ந்து பொதுமக்களுக்கும் , கால்நடைகளுக்கும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

  இதுகுறித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறியும் பலர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் கரைகளை உடைத்து மின் வயர் பதித்தும் 100க்கும் மேற்பட்ட பெரிய குழாய்களை அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News