வாக்குசாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
பெரம்பலூரில் வாக்குசாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் பராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் (13.04.2024) பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவடத்தில் உள்ள 147.பெரம்பலூர்(தனி), 148.குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது, வாக்குச்சாவடி மையங்களில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு கோல்டன்கேட்ஸ் பள்ளியிலும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றது.
முதல் பயிற்சி வகுப்பு 24.03.2024 அன்றும், இரண்டாம் கட்ட பயிற்சி 07.04.2024 அன்றும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றது. பெரம்பலூர் கோல்டன்கேட்ஸ் பள்ளியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் பராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கு இன்றியமையாதது. ஜனநாயகத்திருவிழாவில் நாமும் பங்கேற்கின்றோம் என்ற முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும். பயிற்சி வகுப்புகளில் உங்களுக்கு வழங்கப்படும் தகவல்களை முழுமையாக அறிந்து, நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளவேண்டும். வாக்குப்பதிவு நாளன்று மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பயிற்சிக்கு வந்த அலுவலர்கள் தங்கள் தபால்வாக்குகளை செலுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு செலுத்தும் மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.