சிதம்பரத்தில் உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் திடல் வெளி பகுதி அருகே உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் திடல் வெளி பகுதியை சேர்ந்த வடிவேலு மகன் அருண் பாண்டியன். இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆகி கடந்த 1 மாதம் முன்புதான் குழந்தை பிறந்த நிலையில் அருண்பாண்டியன் 11ஆம் வகுப்பு பள்ளியில் படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த சக பள்ளி மாணவன் சதீஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று சந்திர மலை பகுதி அருகே அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டிருக்கும்போது சம்பவ இடத்திற்கு சதீஷ் வந்த நிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் சதீஷ், அருண் பாண்டியனை கத்தியால் வெட்டி தலை துண்டித்து கொலை செய்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்று உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கடலூரில் இருந்து மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது