கலைஞர் நூலகத்தில் மழை நீர் புகாதவாறு குழாய்கள் அமைப்பு
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் மழைநீர் புகாதவாறு மழைநீர் குழாய்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் மழைநீர் புகாதவாறு மழைநீர் குழாய்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று நூலகத்தில் நேற்று ஆய்வு செய்த பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் உறுதியளித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) பிற்பகல் திடீரென மிக கனமழை பெய்தது. மிக குறைந்த கால இடைவெளியில் சுமார் 106 மி.மீ அளவுக்கு மழை பெய்தது.
இந்நிலையில், நூல்கத்தின் தரைத்தளத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் தொட்டியில் பார்வையாளர்கள் கவனக்குறைவால் பாலிதீன் பைகள், திண்பண்டப் (பிஸ்கட்) பாக்கெட், தாள்கள் மற்றும் தெர்மகோல் போன்றவற்றை போட்டதால் மழைநீர் வெளியேற அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் மழைநீர் நூலகத்தின் தரைத்தளத்தில் புகுந்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் ஏற்பட்ட இடர்பாடு மிக துரிதமாக நீக்கப்பட்டு மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அனைத்துப் பிரிவுகளும் எவ்வித தடையுமின்றி இயல்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. மேலும், இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நேராமல் தடுக்கும் வண்ணம் தற்போது மழைநீர் குழாய்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுஎன்றார்.