பி.எம் கிஷான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
பி.எம் கிஷான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் நிதியுதவி கிடைக்கப்பெறாத, தகுதியுடைய விவசாயிகள் வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதிக்குள் PM KISAN PORTAL மூலமாக பதிவுசெய்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல் பி.எம்.கிசான் (PM KISAN) பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித்திட்டத்தின் கீழ் நாளது தேதி வரை மாவட்டத்தில், 1,16,531 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டொன்றுக்கு ரூ.6000/- நிதி உதவி மூன்று சமகால தவணைகளில், சாகுபடி நிலம் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் தற்போது வரை 15 தவணைகளாக நிதி உதவி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில், இன்னும் சில தகுதியான விவசாயிகளுக்கு இந்நிதி உதவி கிடைக்கப் பெறாமல் உள்ளதால், தகுதியான அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் இணைக்கும் நோக்கில் கிராம முனைப்பு இயக்கங்கள் வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்நது, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளான் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர்கள் கிராம அளவிலான ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
01.02.2019 தேதிக்கு முன்னர் தங்கள் பெயரில் சாகுபடி நிலம் இருந்தும், பி.எம்.கிசான் நிதியுதவி கிடைக்கப்பெறாத விவசாயிகள் இக்கிராம ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி தங்களின் நில உடமை ஆவணங்கள் ஆதார் மற்றும் வங்கி விபரங்களை அளித்து ekyc வசதியினை பொது சேவை மையங்கள் / இந்திய தபால் துறை வங்கிகள் / வர்த்தக கூட்டுறவு வங்கிகள் மூலமாக மேற்கொண்டு PM KISAN PORTAL மூலமாக பதிவுசெய்து இந்நிதி உதவித்திட்டத்தில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.