கிருஷ்ணகிரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
கிருஷ்ணகிரியில் இன்று 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் இன்று (மாா்ச் 3) தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் 959 மையங்களில் நடைபெற்றது .இதில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் ஆட்சியர் சரயு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். ஆட்சியா் கே.எம்.சரயு கூறும் போது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் 1,50,767 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக கிராமப்பகுதியில் 879 முகாம்களும், நகராட்சிப் பகுதியில் 80 முகாம்களும் என மொத்தம் 959 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக பொது சுகாதாரத் துறையில் ஆரம்ப சுகாதார செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், தன்னனாா்வலா்கள் என சுமாா் 3,964 பணியாளா்கள் ஈடுபட்டு உள்ளனா்.
குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், சுங்க வசூல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள், போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக சுகாதாரத் துறை மற்றும் பிற துறை சாா்ந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை போலியோ நோய் இல்லாத மாவட்டமாக்க இந்த தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என கூறினார்.