போலியோ சொட்டு மருந்து முகாம் - துவக்கி வைத்த மேயர்
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது
திருச்சி மாநகராட்சி தென்னூர் நடுநிலைப் பள்ளி மற்றும் தில்லை நகர் மக்கள் மன்றத்திலும் மாநகராட்சி மேயர் அன்பழகன் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 267 சிறப்பு மையங்கள் அமைக்கபட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60,613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் 1036 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மையங்கள் அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.