முதியோர், மாற்றுத்திறன் உடையோர் தபால் வாக்குப்பதிவு இன்று துவக்கம்!

நீலகிரியில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறன் உடையோருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது.

Update: 2024-04-05 10:00 GMT

நீலகிரியில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறன் உடையோருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது.


இந்தியாவில் 7 கட்டமாகவும் தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், 40 சதவீதத்துக்கு மேல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்வதைத் தவிா்க்கும் விதமாக, தபால் வாக்கு அளிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தபால் வாக்கு வாக்காளா்களின் விருப்பத்தின்பேரில் மட்டுமே வழங்கப்படும். கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு விருப்பும் தெரிவிப்பதற்கான 12-டி படிவம் வாக்குச் சாவடி அலுவலா்களால் வழங்கப்பட்டது. இதில் விருப்பம் தெரிவித்தவர்கள் தமிழக முழுவதும் இன்று முதல் தபால் ஓட்டு பதிவு செய்யத் தொடங்கினர். நீலகிரியில் இன்று முதல் இந்த பணிகள் தொடங்கியது.

ஊட்டி தலைக்குந்தா பகுதியில் தபால் ஓட்டு போடும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அருணா நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரியில் தபால் ஓட்டு பதிவு செய்ய தகுதியான 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3056 பேரும், மாற்றுத்திறன் உடையோர் 4050 பேரும் உள்ளனர். இதில் தபால் ஓட்டு அளிக்க வயதானவர்கள் 796 பேரும், மாற்றுத்திறன் உடையோர் 981 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று முதல் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும். மேலும் தபால் வாக்கு செலுத்தும் போது தேவையில்லாத அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குப் பதிவு நடைமுறையில் வாக்குப் பதிவு அலுவலா்கள், விடியோ குழுவினா் வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப் பதிவு மேற்கொள்வா். இந்த வாக்குப் பதிவு விடியோ பதிவு செய்யப்படும். இதில், சம்பந்தப்பட்ட வேட்பாளா்களும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News