சேலத்திற்கு மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு !!

சேலத்திற்கு மாம்பழம் வரத்து அதிகமானதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று விலை குறைந்து உள்ளது.

Update: 2024-06-01 05:17 GMT

மாம்பழம்

சேலம் மாவட்டம் எடப்பாடி, வாழப்பாடி, காரிப்பட்டி, ஆத்தூர், வரகம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. அதே போன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் மா மரங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மா விளைச்சல் அதிகம் இருக்கும். இங்கு விளையும் மாம்பழங்கள் சேலத்திற்கு மொத்தமாக விற்பனைக்கு வரும். இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் கடந்த 2 மாதங்களாக வழக்கத்தை விட குறைந்த அளவு மாம்பழங்களே விற்பனைக்கு வந்தன. தற்போது வரத்து அதிகம் உள்ளது. இது குறித்து மாம்பழ வியாபாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- மாம்பழ சீசன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இருக்கும். மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு மழை பொய்த்து கடும் வறட்சி நிலவியதால் விளைச்சல் குறைவாக இருந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக சேலத்திற்கு மாம்பழங்கள் வரத்து குறைவாக இருந்தது. ஆனால் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிக அளவு மாம்பழங்கள் வரத்தொடங்கின. இதனால் மாம்பழ சீசன் களை கட்டத்தொடங்கி உள்ளது. அதன்படி சேலம் பெங்களூரா, குண்டு மாம்பழம், அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரா உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் விற்பனைக்கு அதிகம் வருகின்றன. தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 40 டன்னுக்கு மேல் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. வரத்து அதிகமானதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று விலை குறைந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News