ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி - பூரண கும்ப மரியாதை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார். நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரவில் கவர்னர் மாளிகையில் தங்கினார். அப்போது பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
நேற்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட பிரதமர் 9.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். சரியாக 10.10 மணிக்கு விமானம் திருச்சி வந்தடைந்தது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு அங்கிருந்து இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் ஶ்ரீரங்கம் புறப்பட்டார்.
10.35 மணி அளவில் ஶ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பிரதமர் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரங்கா ரங்கா கோபுரத்தை அடைந்தார். வழியில் அவர் காரின் கதவை திறந்து நின்றபடிபொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார். வழி நெடுகிலும் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஶ்ரீரங்கம் முழுவதும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. பொதுமக்கள் வரவேற்பை ஏற்கும் வகையில் பிரதமரின் கார் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. வீடுகளின் மாடிகளில் இருந்தும் பொதுமக்கள் பிரதமருக்கு கையசைத்தபடி வரவேற்பு அளித்தனர். மக்கள் பூக்களை அள்ளி வீசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜெய் ஶ்ரீராம் என்று முழக்கமிட்டும் வரவேற்றனர். சரியாக 11 மணி அளவில் ரங்கா ரங்கா கோபுரத்தை அடைந்ததும் அங்கு பிரதமருக்கு , அர்ச்சகர்கள், பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.