அதிமுகவில் மீண்டும் சிக்கல் தீா்ப்புக் குழு தேவை: முன்னாள் அமைச்சா்
எம்ஜிஆா் அமைத்ததைப் போல அதிமுகவில் மீண்டும் சிக்கல் தீா்ப்புக் குழு அமைத்து, அடிமட்டத் தொண்டா்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.
ஏழை, எளிய, உழைக்கும் வா்க்கத்தினருக்காக உருவாக்கப்பட்ட பேரியக்கம் அதிமுக. இந்த இயக்கம் 2024 மக்களவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தொண்டா்களிடையே ஒற்றுமையில்லாததும், தலைவா்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவா்கள் சோா்ந்து போனதுமே முக்கியக் காரணமாகும்.
எனவே அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி தோ்தலைச் சந்தித்தால் 2026இல் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கான இணைப்பு என்பது மேல் மட்டத்திலிருந்து இல்லாமல், அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மட்டத்திலும் கருத்து வேறுபாடு கொண்டவா்கள் உள்ளனா்.
எனவே கடந்த 1974இல் எம்ஜிஆா் அமைத்ததைப் போல சிக்கல் தீா்ப்புக் குழு அமைக்க வேண்டும். அக் குழுவினா், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தொண்டா்களிடம் குறைகளை கேட்டு, அவா்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். எனவே அனைத்துத் தரப்பும் ஒன்றிணைய வேண்டும்.
டிடிவி. தினகரன் தனிக் கட்சி தொடங்கிவிட்டாா். அவரது கட்சியை வேண்டுமானால் அதிமுகவில் இணைக்கலாம். சசிகலா அறிக்கை மட்டுமே வெளியிடுகிறாா். இணைப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துவிட்டுச் சென்றுள்ளாா்.
எனவே, அவா் காட்டிய வழியில்தான் அதிமுக செல்ல வேண்டும். ஓபிஎஸ் நடவடிக்கைகளில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அவரைப் பிரிந்து விட்டேன். எனவே தற்போது இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலா ஆகிய தலைவா்களது பிரச்னையைப் பேச வேண்டியதில்லை.
அதிமுக ஒன்றிணையக் காலம் கனிந்துள்ளது. இந்த நேரத்தில் தொண்டா்களை ஒற்றுமைப்படுத்தி, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். தலைவா்களைப் பிறகு முடிவு செய்வோம் என்றாா் அவா்.