மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.85 லட்சம் மதிப்பிலான செயற்கை உபகரணங்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2023-11-07 01:17 GMT

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கை உபகரணம் வழங்கப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், ஆர்டிஓ மந்தாகினி, வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சுய தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 384 பேர் மனு அளித்தனர். பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண உத்தரவிட்டார். இந்நிலையில், கலசபாக்கம் தாலுகா, சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் வசித்துவரும் இருளர் பழங்குடியின சமுகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு நிரந்தமாக வசிக்க வீடு கட்டித்தரக்கோரி மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து மீட்கப்பட்டதாகவும், தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும், மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும், மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தித்தர வேண்டும், ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்நிலையில், உதவி உபகரணங்கள் வழங்கக்கோரி ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் அளித்திருந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ரூ.4.85 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கை மற்றும் செயற்கை கால்கள் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆட்சியர் முருகேஷ் நேற்று 7 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், ஒருவருக்கு செயற்கை கை ஆகியவற்றை வழங்கினார். அப்போது, செயற்கை கை மற்றும் செயற்கை கால்களை பொருத்திக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசுக்கு நன்றி தெரிவித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுப்பதற்காக வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News