தெருவிளக்கு கேட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகளின் மின் இணைப்பை துண்டித்த மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் பங்களிப்பு நிதியில் மின் 17 மின்கம்பங்கள் அமைக்ப்பட்டு வீடுகளுக்கான மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கான மின் இணைப்பிலேயே மின்வாரியத்திற்கு தெரியாமல் 24 மணி நேரம் எரியக்கூடிய வகையில் ஊராட்சி சார்பாக தெருவிளக்கும் அமைத்துள்ளனர்
.இது குறித்து ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள் 4 நாட்களுக்கும் முன்பு தெருவிளக்கு மின் இணைப்புகளை துண்டித்துள்ளனர். இதனால் தெரு விளக்கு இல்லாமல் தெருக்கள் இருளில் மூழ்கின. இப்பகு மண்சாலையாக உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சிரமத்துடன் கடந்து வந்த நிலையில் தற்போது மின்விளக்கு துண்டித்ததால் கடும் அவதி அடைந்துள்ளனர். மின் கம்பங்களின் இணைப்பை துண்டித்து இருளில் மூழ்கடித்த மின்சார துறையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட மின்கம்பங்களில் தீப்பந்தங்களை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய அப்பகுதி மக்கள் உடனடியாக சாலையில் உள்ள மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெரு விளக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக மயிலாடுதுறை நகர உதவி பொறியாளர் அவர்களிடம் கேட்டபோது, மேற்கண்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடியிருப்புகளுக்காக மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது வீடுகளுக்கான இணைப்பிலேயே தெரு விளக்கை அமைத்துள்ளனர். இது சட்ட விரோதமானது எனவும் 24 மணி நேரமும் மின்விளக்கு எரியும் என்பதால் ஆபத்தான நிலையும் உள்ளது. எனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேற்கண்ட பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைக்க மனு அளித்தால் உடனடியாக தெருவிளக்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..