விளாங்குடியில் தேங்கிய மழை நீரில் மீன் குஞ்சுகளை விட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்
விளாங்குடியில் தேங்கிய மழை நீரில் மீன் குஞ்சுகளை விட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈ.
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கு தலா 20 வார்டுகள் என்று பிரிக்கப்பட்டு 5 மண்டலங்கள் என மொத்தம் 100 வார்டுகள் உள்ளன.இந்நிலையில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் சாலைகள் சிதலமடைந்தும் சேறும் சகதியும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டும் மிகவும் மோசமான நிலையில் மாமதுரை துர்நாற்றம் வீசும் மதுரையாக காட்சியளிக்கிறது.
அந்த வகையில் மதுரை மேற்கு தொகுதி,மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட விளாங்குடி 20வது வார்டின் தெருக்கள் முழுவதும் குண்டும் குழியுமாக மோசமான நிலையை எட்டியுள்ளது. அந்த அளவுக்கு தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. விளாங்குடி 20வது வார்டு முழுவதும் உள்ள தெருக்கள் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வார்டின் உறுப்பினர் நாகஜோதிசித்தன் (அதிமுக) பலமுறை மாநகராட்சி மண்டல கூட்டத்தில் முறையிட்டும் கோரிக்கை மனு அளித்தும் பொதுமக்களுடன் பல முறை போராட்டம் நடத்தியும் எவ்வித பலனுமில்லை.மண்டல தலைவர், உதவி ஆணையாளர்,
உதவிபொறியாளர் ஆகியோரை பலமுறை அழைத்தாலும் நேரில் வர தயக்கம் காட்டி வருவதாக விளாங்குடி பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் விளாங்குடி பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் நாகஜோதி சித்தன் தலைமையில் இராம மூர்த்திநகர்,கிருஷ்ணா தெருவில் சேற்றில் நாற்று நட்டும், பொன் நகர் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் தேங்கி கிடந்த நீரில் மீன்குஞ்சுகளை விட்டு போராட்டம் செய்தனர்.
மேலும் ஒருசில பாதாள சாக்கடைக்கு மூடி இல்லாமலும் ஒருசிலவற்றில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதால் டெங்கு மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படுகிறது.எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.