தார் தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் - 300 பேர் கைது
சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் உள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான தார்கலவை தயாரிக்கும் ஆலையால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் ஆலையைஅங்கிருந்து அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டமும் கோரிக்கை வைத்து வந்தனர் .
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் ஐல்லி துகள்களால் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த எடமணல், திருநகரி, திருமுல்லைவாசல், வருசைபத்து உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தார் கலவை தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இடம் மணல் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என அறிவித்தனர். அதனை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்