மேம்பாட்டு பயிற்சி; சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கல்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில் நடந்த கைவினைத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகக் கூட்ட அரங்கில் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய, கைவினைத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கைவினைத் திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தலையாட்டி பொம்மைகள் தயாரித்தல், பித் வேலைப்பாடு மற்றும் தஞ்சாவூர் பெயிண்டிங் ஆகிய பயிற்சிகள் கடந்த டிச.04 முதல் மார்ச்.11 வரை 3 மாதங்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் 18 முதல் 35 வரை வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது மாதத்திற்கு ரூ.12,500/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது, பயிற்சி கையேடு தரப்படுகிறது. இப்பயிற்சியில் அந்தந்த துறையில் களஆய்வு மேற்கொள்ளுதல், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் சந்தைபடுத்துதல் கற்றுத்தரப்படுகிறது. பயிற்சி முடிந்தபின் தொழில் தொடங்குவது மற்றும் வங்கிக்கடன் பெறுவது பற்றிய ஆலோசனை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூரில் கைவினைத்திறன் மேம்பாட்டு பயிற்சிகளான பித் வேலைபாடுகள் ( 3 மாதம்) தஞ்சாவூர் பெயிண்டிங் ( 3 மாதம்) மற்றும் தலையாட்டி பொம்மை ( 3 மாதம்) பயிற்சிகள் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழக பயிற்சிக் கூடத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு பயிற்சியிலும் 30 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள்" என்றார்.
தொடர்ந்து, கைவினைத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்த 90 பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்ப்பல்கலைக்கழகம் துணைவேந்தர், வி.திருவள்ளுவன், சிப்போ பொது மேலாளர் க.பழனிவேல்முருகன், மாவட்ட திறன்பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் எஸ்.இராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.