மழைநீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுச்சத்திரம் பகுதி சர்வீஸ் சாலையில் அகலமான மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டி ஊராட்சி, நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் மேம்பாலத்திற்கு கிழக்குப்புறமாக நவணி சர்வீஸ் சாலை உள்ளது. சாலைக்கு அருகில் குடியிருப்புகள், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நவணி ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு பள்ளிகள், திருமண மண்டபம், கடைகள் உள்ளது. புதுச்சத்திரம் நெடுஞ்சாலை பாலத்திற்கு கீழ், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு அதில் பைப்லைன்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சர்வீஸ் சாலையின் கீழ், அமைக்கப்பட்டுள்ள வடிகால் பைப் லைன் சற்று உயரமாக போடப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் கடைகள் ஆகியவற்றின் மழைநீர் அதிகமாக சென்று தேங்குகிறது. தண்ணீர் வடிவதற்கு நீண்ட நாட்கள் ஆகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்.... நீண்ட நாட்களாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழை காலங்களில் இப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. மழை விட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் இப்பகுதியில் தண்ணீர் வெளியேறாமல் உள்ளது. எனவே, சர்வீஸ் சாலைகளின் இரு புறங்களிலும், மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்,’ என்றனர்.