பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

ராஜீவ் காந்தி நகர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி விட்டு சிறு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-02-24 14:51 GMT

தர்மபுரி நகராட்சி 30-வது வார்டு பாரதிபுரம் ராஜீவ் காந்தி நகரில் 200-க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் தினமும்ராஜீவ் காந்தி நகர் மெயின் ரோடு வழியாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த ராஜீவ் காந்தி நகர் மெயின் ரோடு 20 அடி அகலம் இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்புகளால் 12 அடிக்கு குறுகலாக மாறிவிட்டது. இந்த நிலையில் நகராட்சி சார்பில் அந்த சாலையின் தொடக்கப்பகுதியில் சாக்கடை கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ள அந்த சாலையில் 4 சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் ராஜீவ் காந்தி நகர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி விட்டு சிறு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி நகராட்சி கவுன்சிலர், மாதேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு எந்த பணியாக இருந்தாலும் மேற்கொள்ளுங்கள் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News